*உன்னால் என்னால் *.திரைப்பட விமர்சனம்;
இந்தப் படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். முக்கிய வேடமொன்றில் இயக்குநர் A.R.ஜெயகிருஷ்ணா நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடித்துள்ளனர்.
மற்றும் ராஜேஷ், ரவி மரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லை சிவா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சோனியா அகர்வால் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – கிச்சாஸ், இசை – முகமது ரிஸ்வான், பாடல்கள் – தமிழமுதன், கருணாகரன், பொன் சீமான், படத் தொகுப்பு – M.R.ரெஜிஷ், கலை இயக்கம் –விஜய் ராஜன், நடனம் – கௌசல்யா, சண்டை பயிற்சி – பில்லா ஜெகன். தயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன், தயாரிப்பு – ராஜேந்திரன் சுப்பையா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – A.R.ஜெயகிருஷ்ணா. பத்திரிகை தொடர்பு – சக்தி சரவணன்.
குடும்ப வறுமையின் காரணமாக ஏதாவது வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள்.
ஒருவருக்கு வீட்டில் கடன் பிரச்சினை. மற்றொருவருடைய தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இன்னொருவர் தான் காதலித்த பெண்ணை பணம் சம்பாதித்துக் கொண்டு சென்றால்தான் திருமணம்.. இப்படி மூன்று பேருக்கும் மூன்று கட்டாயங்கள்.
இதனால் பணத்தைத் தேட வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு. ஓரிடத்தில் இவர்கள் மூவரும் இணைகிறார்கள். ரியல் எஸ்டேட் துறையில் புரோக்கர் வேலை செய்கிறார்கள். இதிலும் சொல்லிக் கொள்ளும்படி வருமானம் இல்லை. பெரிதும் நம்பியிருந்த ஒரு கமிஷன் ஏமாற்றம் தந்தது. இப்போது மூன்று பேருமே விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள்.
இப்போது அவர்களைத் தேடி ரியல் எஸ்டேட் தாதாவான சோனியா அகர்வாலின் ஆளான ரவி மரியாவின் மூலம் ஒரு வாய்ப்பு வருகிறது. அவர்கள் ஒரு நபரைக் கொலை செய்தால் அவர்களுக்குத் தேவையானதைவிடவும் அதிகமாகவே பணம் கிடைக்கும் என்று ஒரு கூலிக்குக் கொலை செய்யும் வேலை வருகிறது.
அந்த நபர் யார் என்று அறிகிறபோது அதிர்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால் கொலை செய்யப்பட வேண்டிய அந்தப் பெரியவர் ராஜேஷ் இப்போது அவர்களுடன்தான் தங்கி இருக்கிறார். . ரவிமரியா ராஜேஷை கொலை செய்யும் அஸைண்மெண்ட்டை ஏற்றுக் கொள்கிறார்களா.. இல்லையா என்பதுதான் இந்த ‘உன்னால் என்னால்’ படத்தின் திரைக்கதை.
கிராமத்தில் இருந்து வரும் மூன்று இளைஞர்களாக ஜெகா, இயக்குநர் கே.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் மூவரும் நடித்துள்ளார்கள். இயக்கி நடித்த இயக்குநரைவிட அவர் சொல்லிக் கொடுத்து நடித்திருக்கும் ஜெகா, உமேஷ் என்ற இரண்டு இளைஞர்களும் குறை இல்லாமல் நடித்துள்ளார்கள்.
சோனியா அகர்வாலுக்கு இதுவொரு வித்தியாசமான அனுபவ நடிப்புதான். ரியல் எஸ்டேட் மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். மிகச் சில காட்சிகளிலேயே வருகிறார். முறைப்பாகப் பேசி மிரட்டுகிறார். வில்லித்தனத்தை கண்ணிலேயே காட்டுகிறார்.
சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் என்று மிதமான அழகு கொண்ட சுமார் மூஞ்சி குமாரிகளும் சுமாராக நடித்துள்ளார்கள். சோடா கோபால் என்ற பாத்திரத்தில் ரவி மரியா நடித்திருக்கிறார். இவர் காமெடியனா, வில்லனா என்பதை உணர்வதற்குள் படமே முடிந்துவிட்டது. அவரது பேச்சும், உடல் மொழியும் காமெடியை தந்தாலும் முட்டாள்தனமான கேரக்டராக உள்ளது.
மூத்த நடிகர்களான ராஜேஷ், டெல்லி கணேஷ் இருவரும் முத்தாக நடித்துள்ளனர். ராஜேஷ் வானமே எல்லை இரண்டாம் பாகம்போல இன்றைய இளைஞர்களுக்கு அறிவுரை சொல்வது மிக சரியானதுதான்.
டெல்லி கணேஷ் மிக இயல்பான நடிப்புடன் வசனங்களை பேசி இவ்வளவுதாம்பா என்னால் முடிஞ்சது என்று பாக்கெட்டில் பணத்தைத் திணித்துவிட்டு ஓரமாகப் போகும்போது தனது குணச்சித்திர நடிப்பை காண்பிக்கிறார்.
ஆர்.சுந்தர்ராஜன் ஒரு நாயகியின் அப்பாவாக நடித்துள்ளார். மோனிகா இறுதியில் வந்து படத்தை முடித்து வைக்கிறார். நெல்லை சிவா காமெடி என்ற பெயரில் ஏதோ செய்திருக்கிறார்.
பணத்தைத் தேடி அலையும் இளைஞர்களின் பிரச்சினையை விறுவிறுப்பாக சொல்லி, கதையைக் கொண்டு சென்றிருக்கலாம்.
அந்த இளைஞர்களுக்குப் பணத் தேவை இருக்கிறது. அதற்கான நோக்கமும், முயற்சியும், உழைப்பும் இல்லை என்பது கடைசிக் கட்டத்தில் ராஜேஷ் சொல்லித்தான் அவர்களுக்கே தெரிகிறது.
எடுத்துக் கொண்ட பிரச்சினையைப் பற்றி நல்ல காட்சிகளைக் கொண்டு முறைப்படுத்தி எடுத்து இருந்தால் ஒரு நல்ல படமாக அமைந்திருக்கலாம். சொல்ல வந்த கதை தடுமாற்றத்துடன் முடித்து இருக்கிறது .
படத்தில் ஒரே ஆறுதல் ஒளிப்பதிவும், இசையும்தான். அனுபவமுள்ள ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர்தான் படத்தை இந்த அளவுக்கு தேற்றி உள்ளார் என்று கருதலாம். பாடல் காட்சிகளைப் பார்க்கும்படி செய்திருப்பது அவர்தான்.
இசையமைப்பாளர் ரிஸ்வான் ஒரு பெரிய படத்திற்கான உழைப்பைப் போட்டுள்ளார்.. ஒரு வணிகப் படத்திற்கான மெட்டுகளைப் போட்டு பாடல்கள் அனைத்தையும் கேட்கவும், பார்க்கவும் வைத்திருக்கிறார்.
கதை, திரைக்கதை கவனம் செலுத்தி இருக்க வேண்டும் சுவாரசியம் இல்லாத காட்சிகள் இயக்குனரின் முயற்சிற்க்கு பாராட்டு