சமீபத்தில் 20 ஆண்டுகள் நிறைவு செய்த இமானின் மறுமணத்துக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
2008-ல் மோனிகா ரிச்சர்டை முதலில் திருமணம் செய்தார் இமான். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உண்டு. மோனிகாவை விவாகரத்து செய்துவிட்டதாகக் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார்.
மறைந்த விளம்பர டிசைனர் உபால்டுவின் மகள் அமலியை இமான் சமீபத்தில் மறுமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தில் இமானின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். திரையுலகில் சமீபத்தில் 20 ஆண்டுகள் நிறைவு செய்த இமானின் மறுமணத்துக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்
இந்நிலையில் மறுமணம் குறித்து தனது கருத்துகளை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார் இமான். அவர் கூறியதாவது:
மே 15 அன்று அமலி உபால்டை மறுமணம் செய்தது குறித்த தகவலைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய கடினமான நேரங்களில் என்னுடைய பலமான தூணாக இருக்கும் என் தந்தை டேவிடுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன். கடந்த சில வருடங்களாக நானும் என் குடும்பத்தினரும் எதிர்கொண்ட சவால்களுக்கு இந்த ஏற்பாட்டுத் திருமணம் பெரிய தீர்வாகவும் மகிழ்ச்சிக்கான காரணமாகவும் உள்ளது. மறைந்த என் தாய் மஞ்சுளா டேவிடின் ஆசிர்வாதம் இது. அருமையான மனிதரான அமலியை நான் அடைவதற்குக் காரணம் இருந்த என் குடும்ப உறுப்பினர்களுக்கும் நலம்விரும்பிகளுக்கும் நன்றி. அமலியின் மகள் நேத்ரா, இனிமேல் என் 3-வது மகள். நேத்ராவின் தந்தையானதற்கு எல்லையில்லா மகிழ்ச்சியும் அருமையான உணர்வுகளும் ஏற்படுகின்றன. எங்களுடைய திருமண நாளன்று என்னுடைய அன்பான மகள்களான வெரோனிகா, பிளெஸிகா ஆகியோர் இல்லாதது தனிப்பட்ட முறையில் வருத்தத்தை அளித்தது. எங்களுடைய மகள்கள் என்றாவது ஒருநாள் வீட்டுக்கு வரும் தருணத்துக்காக மிகுந்த அன்புடன் நான்/ நாங்கள் பொறுமையாகக் காத்திருப்போம். நானும் அமலியும் நேத்ராவும் எங்கள் உறவினர்களும் வெரோனிகா, பிளெஸிகாவை ஏராளமான அன்புடன் வரவேற்போம் என்று கூறி திருமணப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.